காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபர்
காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஒசகோட்டை:-
இளம்பெண் அறிமுகம்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்தவர் மஞ்சுநாத். தொழிலாளி. இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் இளம் பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் அதிகமானது. மஞ்சுநாத் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் அந்த பெண்ணிடம் கூறி உள்ளார்.
ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், நண்பர்களாக மட்டும் பழகுமாறு அவர் கூறி உள்ளார். இதற்கிடையே இளம்பெண்ணுக்கு, புதிய செல்போன் ஒன்றை அவர் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் மஞ்சுநாத் மீண்டும் தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணை தொல்லை செய்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த இளம்பெண், இதுகுறித்து பெற்றோரிடம் கூறி உள்ளார்.
கழுத்தை அறுத்து...
இதையடுத்து அவரை பெங்களூரு புறநகர் ஒசகோட்டை தாலுகா உப்பரஹள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு சந்திக்க வேண்டும் என கூறி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். எனினும், இறுதியாக ஒருமுறை சந்தித்து பேசிவிடுமாறு அவர் கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த பெண், மஞ்சுநாத்தை வரவழைத்து பேசி உள்ளார். அந்த சமயத்தில் இளம்பெண்ணை காதலிப்பதாகவும், எனவே தன்னை காதலிக்குமாறும் பெண்ணை மிரட்டி உள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த மஞ்சுநாத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சரிந்து விழுந்தார். மேலும், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
ஒருதலை காதல்
இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஒசகோட்டை போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்வையிட்டனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒருதலை காதல் விவகாரத்தில், காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை வாலிபர் அறுத்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.