பால் விற்பனை நிலைய உரிமையாளரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.7 லட்சம் திருட்டு


பால் விற்பனை நிலைய உரிமையாளரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.7 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பால் விற்பனை நிலைய உரிமையாளரிடம் ஸ்கூட்டர் பெட்டியை திறந்து ரூ.7 லட்சத்தை 4 பேர் கும்பல் திருடி சென்றனர்.

மங்களூரு:-

ஸ்கூட்டரில் பணம் திருட்டு

உடுப்பி மாவட்டம் காபு மெயின் ரோட்டில் பால் விற்பனை நிலையம் வைத்திருப்பவர் ராகவேந்திரா கினி. தினமும் இரவு இவர் வேலை முடித்துவிட்டு, பால்பாக்கெட் விற்பனை செய்த பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வார். மறுநாள் வங்கியில் அந்த பணத்தை டெபாசிட் செய்வார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் பணத்தை எடுத்து செல்லவில்லை. 3 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் இவர் வசூலான பணத்தை எடுத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட முயற்சித்தார்.

அப்போது திடீரென்று கடைக்கு யாரோ வந்ததால், அவசரமாக ஸ்கூட்டரின் பெட்டிக்குள் பணத்தை வைத்துவிட்டு சென்றார். இதை அவரது கடையின் அருகே நின்ற 4 பேர் பார்த்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் கடையின் அருகே சென்று பால்பாக்கெட் வாங்குவது போன்று பாவனை செய்தார். மற்றொரு நபர் ஸ்கூட்டர் அருகே சென்று டயரை பஞ்சராக்கிவிட்டு, கள்ளச்சாவி மூலம் பெட்டியை திறந்தார். பின்னர் அதில் இருந்த ரூ.7 லட்சத்தை திருடி கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

4 பேர் கைவரிசை

இந்நிலையில் கடையை பூட்டிய ராகவேந்திரா ஸ்கூட்டரை எடுக்க முயன்றபோது, அது பஞ்சராகியிருந்தது. மேலும் ஸ்கூட்டரின் பெட்டிக்குள் இருந்த ரூ.7 லட்சம் மாயமாகியிருந்தது. இது குறித்து அவர் காபு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் ராகவேந்திராவின் நடவடிக்கை நோட்டமிட்டு இந்த பணத்தை திருடியிருப்பதாக தெரியவந்தது.

இது தொடர்பாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் மர்ம நபர்கள் 4 பேர் பணத்தை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை வைத்து 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து காபு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story