பசுமாட்டை அடித்து கொன்ற புலி
பசுமாட்டை அடித்து கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க கிராமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா தேபாபுரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் இரைதேடி வரும் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே கிராமத்தை சோந்த ராஜாமணி என்பவர் தனது பசுமாட்டை தோட்டத்தின் அருகே மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார். வனப்பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று பசுமாட்டை வேட்டையாடிவிட்டு, அதை இழுத்து சென்றது. ராஜாமணி மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை காணவில்லை என்று தேடி அழைந்தார். அப்போதுதான் புலி பசுமாட்டை வேட்டையாடி உடலை வனப்பகுதியில் இழுத்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள் புலிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வெளியே நடமாட பீதியாக இருப்பதாக கூறினர். மேலும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.