கல்லூரி விடுதியில் மாணவிக்கு பிரசவம் பார்த்த வார்டன் - அதிர்ச்சி சம்பவம்
கல்லூரி விடுதியில் மாணவிக்கு பிரசவம் பார்த்த விடுதி வார்டன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தலித் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
சிக்கமகளூரு:-
மாணவிக்கு பிரசவம்
சிக்கமகளூரு டவுன் பேளூர் சாலையில் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதி உள்ளது. இந்த விடுதியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த விடுதியில் தங்கி படித்து வரும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவி ஒருவர் கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு, விடுதியில் வைத்தே வார்டன் பிரசவம் பார்த்துள்ளார்.
இதுபற்றி அவர் சமூக நலத்துறை அதிகாரிக்கு மட்டும் தெரிவித்துள்ளார். ஆனால் வேறு யாருக்கும் இதுபற்றி தெரிவிக்கவில்லை. பிரசவத்துக்கு பிறகு கல்லூரி மாணவிக்கும், குழந்தைக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கல்லூரி மாணவிக்க பிரசவம் பார்த்த விடுதி வார்டன் மற்றும் தகவலை மறைத்த சமூக நலத்துறை அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, மாணவி கர்ப்பம் அடைந்தது எப்படி என்று விசாரிக்கவில்லை என்றும், இதனை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டனர் என்றும், இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.