கபினி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்கிறது
தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கபினி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மைசூரு:-
கபினி அணை
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் மாநிலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் அணைகளில் நீர்மட்டம் குறைந்தது. இந்தநிலையில் தற்போது மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக அதிக கனமழை பெய்து வருகிறது.
இதனால் மாநிலத்தில் முக்கிய அணையான மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சில நாட்களாக அதிதீவிரமாக பெய்து வருகிறது. இதனால் இந்த கபினி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், கபினி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
3 அடி உயர்வு
இதனால் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று முன்தினம் 2,257 அடி தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் நேற்று 3 அடி உயர்ந்து 2,260 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதேநிலை நீடித்தால் 10 நாட்களில் கபினி அணை நிரம்பிவிடும் என நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கே.ஆர்.எஸ். அணை
இதேபோல், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ள குடகில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், அணைக்கு வினாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 80.40 அடி தண்ணீர் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 339 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் கே.ஆர்.எஸ். அணையில் 118 அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.