ஷராவதி அணை நீர்மட்டம் குறைகிறது சிக்கந்தூருக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்?
சாகர் தாலுகாவில் உள்ள ஷராவதி அணையில் நீர்மட்டம் குறைவதால் சிக்கந்தூர் படகு போக்குவரத்தை நிறுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவமொக்கா-
சாகர் தாலுகாவில் உள்ள ஷராவதி அணையில் நீர்மட்டம் குறைவதால் சிக்கந்தூர் படகு போக்குவரத்தை நிறுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷராவதி அணை
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ளது ஷராவதி அணை. இந்த அணையையொட்டி சிக்கந்தூர், துமரி, பியாக்கோடு, கட்டிரகாரு ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது. இதில் சிக்கந்தூர் கிராமத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பிரபலமானது. இந்த கிராமங்களுக்கு பெங்களூரு, மைசூரு உள்பட வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
இந்த கோவிலுக்கு ஷராவதி நீர்த்தேக்கத்தின் வழியாகத்தான் செல்ல முடியும். இதற்காக படகுகள் இயக்கப்படுகிறது. அதாவது ஷராவதி நீர்தேக்கத்தில் இயக்கப்படும் படகு போக்குவரத்து மூலம் சிக்கந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்திற்கு செல்ல முடியும்.
2 கி.மீ. தூரம்
இந்த படகில் பொதுமக்கள் மட்டுமின்றி, கார், மோட்டார் சைக்கிள் உள்பட எந்த பொருட்களை வேண்டுமென்றாலும், ஏற்றி செல்ல முடியும். இந்த படகில் சென்றால் சிக்கந்தூர் கிராமத்திற்கு குறைந்த நேரத்தில் சென்றுவிடலாம். அதாவது சாகரில் இருந்து ஷராவதி நீர்த்தேக்கம் வழியாக 2 கி.மீ தூரம் பயணித்தால் போதும் சிக்கந்தூர் கிராமத்தை சென்றடையலாம்.
பின்னர் சிக்கந்தூரில் இருந்து பிற கிராமங்களுக்கு கார், மோட்டார் சைக்கிளில் சென்றுவிடலாம். புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவில் சிக்கந்தூருக்கு மிகவும் அருகில் இருப்பதாக கூறப்படுகிறது. சிக்கந்தூரில் இருந்து சாலை வழியாக எளிதில் சென்றுவிடலாம்.
மாற்று பாதையில் செல்ல வேண்டும்
ஆனால் நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து குறைந்தாலோ, நீர் வற்றினாலோ இந்த சிக்கந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு படகு மூலம் செல்ல முடியாது. அதாவது படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டுவிடும். அந்த நேரம் மாற்று பாதையைதான் பயன்படுத்தி ஆகவேண்டும்.
இது நீர்த்தேக்கத்தில் படகில் கடந்து செல்வதை விட கூடுதல் தூரம் பயணிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன்படி சாகரில் இருந்து நிட்டூர், ஒசநகர் வழியாக சிக்கந்தூருக்கு செல்ல வேண்டும். இதற்காக 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வரை பொதுமக்கள் பயணிக்க வேண்டும்.
19 ஆண்டுகளுக்கு பிறகு...
கடந்த 2002-ம் ஆண்டு மற்றும் 2004-ம் ஆண்டு ஷராவதி நீர்த் தேக்கத்திற்கு நீர்த்வரத்து குறைந்தது. அப்போது இந்த படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது பொதுமக்கள் நிட்டூர், ஒசநகர் வழியாகத்தான் சிக்கந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்திற்கு சென்றனர். இந்தநிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 26-ந் தேதியில் இருந்து இந்த நீர்த்தேக்கத்திற்கு வரும் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்த வண்ணம் உள்ளது. இதன்காரணமாக முதற்கட்டமாக சாகர் தாலுகா முப்பனே நீர்த்தேக்கத்தில் இருந்து சிக்கந்தூர் செல்லும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
படகு போக்குவரத்து நிறுத்தம்?
இதையடுத்து கடந்த 4-ந் தேதி ஒசநகர் தாலுகா அசிருமக்கி நீர்த்தேக்கத்தில் இருந்து சிக்கந்தூருக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது, அடுத்த கட்டமாக சிக்கந்தூர், துமரி, பியாக்கோடு, கட்டிரகாடு கிராமத்திற்கு செல்லும் முக்கிய தளமாக விளங்கும் ஒலே பாகிலு, அம்பரகோடுலு நீர்த்தேக்கத்தில் இருந்து படகு போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வரவில்லை.
விரைவில் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நிறுத்தப்பட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வியாபாரிகள், கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் அன்றாட கூலி தொழிலுக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பருவ மழை பெய்ய தொடங்கிவிட்டால், மீண்டும் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகமாகிவிடும் என்று கூறப்படுகிறது. நீர் வரத்து அதிகமானால், இந்த படகு போக்குவரத்து நிறுத்தப்பட வாய்ப்பு இல்லை என்று நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.