22 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்து காட்டுயானை செத்தது


22 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்து காட்டுயானை செத்தது
x

குஷால் நகரில், வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிய காட்டுயானை 22 அடி ஆழ தரைமட்ட தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக செத்தது.

குடகு:

காட்டுயானை

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவிற்கு உட்பட்டது நல்லூர் கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் இந்த கிராமத்திற்குள் புகுந்து அடிக்கடி அட்டகாசம் செய்து வந்தன. இந்த நிலையில் அந்த காட்டுயானையை பிடிக்க கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் அரசிடம் அனுமதி பெற்று அந்த காட்டுயானையை பிடிக்க துபாரே யானைகள் முகாமில் இருந்து பிரசாந்தா, சுக்ரீவா, ஹர்ஷா, ஸ்ரீராம், விக்ரம், ஈஸ்வரா ஆகிய 6 கும்கி யானைகளை வரவழைத்தனர்.

துப்பாக்கி மூலம்...

மேலும் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்த வசதியாக கால்நடை டாக்டரையும் வரவழைத்து இருந்தனர். பின்னர் அவர்கள் நல்லூர் அருகே உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு அந்த காட்டுயானையை தேடி வந்தனர். நேற்று காலையில் அந்த காட்டுயானை நல்லூரில் உள்ள ஒரு காபித்தோட்டத்தில் இருப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் கும்கி யானைகளுடன் அந்த காபித்தோட்டத்திற்கு சென்றனர்.

அவர்கள் கால்நடை டாக்டர்கள் செட்டியப்பா, ரமேஷ், சிந்தே ஆகியோருடன் சேர்ந்து மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் காட்டுயானைக்கு செலுத்தினர். இதனால் அந்த காட்டுயானை சிறிது தூரம் ஓடி மயங்கியது.

திடீரென ஆக்ரோஷம்

இதையடுத்து மயக்க நிலையில் படுத்திருந்த காட்டுயானையை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் ஆசுவாசப்படுத்தி பிடிக்க முயன்றனர். அந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஆக்ரோஷமாக எழுந்த காட்டுயானை அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. இந்த சந்தர்ப்பத்தில் காபித்தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த 22 அடி ஆழ தரைமட்ட தொட்டியில் அந்த காட்டுயானை தவறி விழுந்தது. இதனால் காயம் அடைந்த அந்த காட்டுயானை நிலைகுலைந்து அப்படியே கிடந்தது.

இதையடுத்து கால்நடை டாக்டர்கள் உடனடியாக வனத்துறையினரின் உதவியுடன் அந்த தொட்டியில் இறங்கி காட்டுயானையை பரிசோதித்தனர். அப்போது அது செத்துவிட்டது அவர்களுக்கு தெரியவந்தது.

பரிதாபம்

இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, அந்த காட்டுயானையின் உடல் தொட்டியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் வனப்பகுதியில் வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டி அங்கேயே புதைக்கப்பட்டது. காட்டுயானையின் இந்த பரிதாப சாவு அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story