வீட்டில் இருந்து வெளியே சென்ற பெண் கொலை
தார்வாரில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பெண்ணை கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த கோவனகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் ரூபா சவதத்தி (வயது 35). கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், ரூபா சவதத்தியை தேடி வந்தனர். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் தார்வார் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரூபா சவதத்தியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரூபா சவதத்தி, தார்வார் புறநகர் பகுதியில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் தார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அது மாயமானதாக தேடப்பட்ட ரூபா சவதத்தி என்பது தெரியவந்தது. உடலில் ரத்த காயங்கள் இருந்தது. இதனால் மர்ம நபர் யாரோ அவரை கொலை செய்து உடலை தார்வார் புறநகர் பகுதியில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்து, கொலையாளியை தேடி வருகின்றனர்.