தூய்மை பணியாளர்களின் உழைப்பு பெருமை அளிக்கிறது-தலைவர் வள்ளல் முனிசாமி பேச்சு
தூய்மை பணியாளர்களின் உழைப்பு பெருமை அளிக்கிறது என்று நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரசபை சார்பில் அலுவலக வளாகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, நகரசபை கமிஷனர் மாதவி ஆகியோர் முன்னிலையில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் நகரசபைக்கு சொந்தமான வாகனங்கள் என 30-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு பூஜை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, நகரசபை கமிஷனர் மாதவி மற்றும் கவுன்சிலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதை தொடர்ந்து நகரசபை ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பழங்கள், பொறி, இனிப்புகள் வினியோகிக்கப்பட்டன.
அப்போது நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி பேசுகையில், 'தூய்மை பணியாளர்கள் இல்லை என்றால் கோலார் நகரம் முழுவதும் துர்நாற்றம் வீசும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தூய்மை பணியாளர்கள் தங்களைப்பற்றி கவலைப்படாமல் உழைப்பது பெருமை அளிக்கிறது' என்று கூறினார்.