திருட்டு பொருடக்ளை கோவிலில் காணிக்கையாக செலுத்திய வாலிபர்


திருட்டு பொருடக்ளை கோவிலில் காணிக்கையாக செலுத்திய வாலிபர்
x

முன்னாள் உரிமையாளர் வீட்டில் திருடிய நகை, பணத்தின் ஒரு பங்கை கோவிலில் வாலிபர் ஒருவர் காணிக்கையாக செலுத்திய வினோத சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:-

பெங்களூரு அசோக்நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கொம்மனஹள்ளியை சேர்ந்த ஜான் என்ற மஞ்சுநாத்(வயது 28) என்று தெரிந்தது. முதலில் ஜான் ஒரு நபரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த நபர், ஜானின் சம்பளத்தை அதிகரிக்கவில்லை. தனக்கு மாதந்தோறும் வழங்கும் சம்பளத்தை அதிகரித்து கொடுக்கும்படி பலமுறை கேட்டும், உரிமையாளர் உயர்த்தவில்லை. இதனால் உரிமையாளருடன் தகராறு செய்துவிட்டு வேலையில் இருந்து நின்று விட்டார். அதன்பிறகு, அசோக்நகரில் உள்ள உரிமையாளரின் வீட்டுக்கு சென்று ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை ஜான் திருடியுள்ளார்.

தங்க நகைகளை அடமானம் வைத்ததால் கிடைத்த பணத்தை எடுத்து கொண்டு கோவிலுக்கு ஜான் சென்றுள்ளார். சாமியிடம் முன்னாள் உரிமையாளர் வீட்டில் திருடியதற்காக மன்னிப்பு கேட்ட அவர், நகைகளை விற்று கிடைத்த பணத்தின் ஒரு பங்கை கோவில் உண்டியலில் காணிக்கையாக போட்டுள்ளார். அத்துடன் கோவில், கிறிஸ்தவ தேவாலயம் முன்பாக அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கும் பணத்தை வழங்கி ஜான் உதவி செய்தது தெரியவந்தது. கைதான ஜான் கொடுத்த தகவலின் பேரில் முன்னாள் உரிமையாளர் வீட்டில் திருடிய நகைகள் மீட்கப்பட்டுள்ளது. அவர் மீது அசாக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story