பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபர்கள் தப்பியோட்டம்


பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபர்கள் தப்பியோட்டம்
x

மைசூரு டவுனில் பட்டப்பகலில் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை வாலிபர்கள் 2 பேர் பறிக்க முயன்றனர். அவர்களது முயற்சி தோல்வி அடைந்ததால் 2 வாலிபர்களும் தப்பிச்சென்றுவிட்டனர்.

மைசூரு:-

நடைபயிற்சி

மைசூரு (மாவட்டம்) டவுன் கே.ஆர்.மொகல்லா அருகே கிருஷ்ணமூர்த்தி புரம் பகுதியில் வசித்து வருபவர் சாரதா. இவர் தினமும் காலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல் நேற்று காலையில் சாரதா, அதே பகுதியில் வசித்து வரும் தனது தோழியுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அவர்கள் அங்குள்ள பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்க, பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் கீழே இறங்கி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

தங்கச்சங்கிலியை பறிக்க முயற்சி

அவர்களை கடந்து சாரதாவும், அவரது தோழியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் செல்போனில் பேசிக் கொண்டிருந்த நபர் நடந்து வந்தார். திடீரென அந்த வாலிபர், சாரதாவின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட சாரதா, தனது கைகளால் தங்கச்சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சல் போட்டார்.

இதனால் அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த அந்த வாலிபர்கள் 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி சாரதா கே.ஆர். போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story