அடுத்தடுத்து 6 கடைகளில் ரூ.9.40 லட்சம் திருட்டு
அடுத்தடுத்து 6 கடைகளில் ரூ.9.40 லட்சம் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு: உடுப்பி(மாவட்டம்) டவுன் குந்திபயவ் பகுதியில் 2 மளிகைக்கடைகள் மற்றும் ஒரு ஜவுளிக்கடை அடுத்தடுத்து அமைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரிகளும், ஊழியர்களும் வியாபாரம் முடிந்து கடைகளை பூட்டிவிட்டு தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த யாரோ மர்ம நபர்கள் 3 கடைகளின் ஷெட்டர் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். இதேபோல் மணிப்பால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டனகுடே பகுதியில் ஒரு மருந்துக்கடை, ஒரு ஜவுளிக்கடை மற்று ஒரு மளிகைக்கடையின் ஷெட்டர் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
ஒரேநாள் இரவில் மணிப்பால் மற்றும் உடுப்பி டவுன் பகுதியில் அடுத்தடுத்து 6 கடைகளில் ஒரே மாதிரியான திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால் இந்த 6 கடைகளிலும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களே கைவரிசை காட்டியிருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த 6 கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.9.40 லட்சம் திருட்டுப்போய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உடுப்பி டவுன், மணிப்பால் டவுன் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.