அரிசிக்கு ஜிஎஸ்டி "தவறான தகவல் பரப்ப வேண்டாம்" - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) கவுன்சிலின் 47-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அரிசி, தயிர், லஸ்சி, மோர், பன்னீர் போன்ற பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ.1,000-க்கு குறைவான வாடகை உள்ள ஓட்டல் அறைகளுக்கு இருந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. எல்.இ.டி. பல்பு, கத்தி, பேனா மை, பிளேடு போன்ற பொருட்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், சூரியசக்தியில் இயங்கும் சோலார் ஹீட்டர் மீதான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், கிரைண்டர், அரிசி ஆலை எந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், தண்ணீர் எடுக்கும் மோட்டார் பம்புகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.
வங்கிக் காசோலைகளுக்கு 18 சதவீதமும், ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரி அறை வாடகைக்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது. சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதா? என்று கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்களும், அரிசி வியாபாரிகளும் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் ஜி.எஸ்.டி. கவுன்சில் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை.
இந்த நிலையில் ஜி.எஸ்.டி. புதிய வரிவிதிப்பு நேற்று அமலுக்கு வந்தது. இந்த வரியால் அரிசி விலை கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை உயரக்கூடும் என்று ஏற்கனவே அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியிருந்தனர். அதுபோல அரிசி விலை ஒரு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை (தரத்துக்கு ஏற்ப) விலை உயர்ந்தது. கடந்த மாதம் ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி மூட்டை (25 கிலோ) ரூ.1,050-க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன்,
சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு பொருந்தும் எனவும் பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை எனவும் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.