நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது- டி.கே.சிவக்குமார் சொல்கிறார்


நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது-  டி.கே.சிவக்குமார் சொல்கிறார்
x

நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது என்று டி.கே.சிவக்குமார் சொல்கிறார்

பெங்களூரு: பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-நாட்டில் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அமல்படுத்தியது குறித்து பா.ஜனதாவினர் அடிக்கடி பேசுகிறார்கள். ஆனால் இன்று அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு மத்திய அரசு தொல்லை கொடுத்து வருவதே இதற்கு சாட்சி ஆகும். காங்கிரஸ் கட்சி தான் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது. தேசிய கொடி, தேசிய கீதம் போன்றவற்றை காங்கிரஸ் ஏற்படுத்தியது. ஆனால் இவற்றை எல்லாம் மாற்ற பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் தியாகத்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் நாடு முழுவதும் சுதந்திர தின பவள விழாவை கொண்டாட முடிவு செய்தோம்.

அதன்படி கர்நாடகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரசார் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிறோம். சில மாவட்டங்களில் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற 15-ந் தேதி பெங்களூருவில் தேசிய கொடியை கையில் ஏந்தி பாதயாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம். கர்நாடக பா.ஜனதா அரசு தேசிய கொடியை விற்பனை செய்வது வெட்கக்கேடானது. நாங்கள் 1½ லட்சம் தேசிய கொடி மற்றும் தொப்பியை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Next Story