பெங்களூருவில் பரபரப்பு 'பே-சி.எம்' போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் தலைவர்கள் கைது
பெங்களூருவில் ‘பே-சி.எம்’ போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் அண்மையில் கியூ.ஆர். கோடுடன் கூடிய 'பே-சி.எம்' போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டர்களை காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டினர். இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக போலீசார் அந்த போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட அக்கட்சியின் தலைவர்கள் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து, அங்குள்ள ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சுவரில் 'பே-சி.எம்' போஸ்டர்களை ஒட்டினர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். அப்போது அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
போலீஸ் வேனில் ஏறுவதற்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த டி.கே.சிவக்குமார், "இந்த அரசின் ஊழல்களை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்கிறோம். 40 சதவீத கமிஷன் குறித்த போஸ்டர் ஒட்டிய விஷயத்தில் எங்கள் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர். அதே போல் காங்கிரஸ் தலைவர்களை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய பா.ஜனதாவினரை போலீசார் கைது செய்யாதது ஏன்?. இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர்" என்றார்.