ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டு மாற்ற வங்கிகளில் கூட்ட நெரிசல் இல்லை
கர்நாடகத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளில் கூட்டம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:-
ரூ.2 ஆயிரம் நோட்டுகள்
நாடு முழுவதும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தினமும் வங்கிகளில் 10 நோட்டுகளை கொடுத்து ரூ.20 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம், அல்லது தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. பொதுமக்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நேற்று முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதனை மாற்றி கொள்வதற்காக வங்கிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
வங்கிகளில் கூட்டம் இல்லை
கடந்த முறை பணமதிப்பிழப்பு செய்த போது நடந்த கூட்ட நெரிசல் ஏற்படுதை தடுக்க 2 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயலும் வாடிக்கையாளர்களுக்காக தனியாக வரிசை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர்கள் கூடுதலாக
வருவார்கள் என்பதால், வங்கிகளில் கூடுதல் இருக்கைகள் போடப்பட்டு இருந்ததுடன், தண்ணீர்
வசதி உள்ளிட்டவையும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்டமுக்கிய நகரங்களில் இருந்து பிற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருக்கும் வங்கிகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக பெருமளவு கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படவில்லை என்று வங்கி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலஅவகாசம் இருப்பதால்...
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஆதார் கார்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களையும் மக்கள் வங்கியில் கொடுக்க வேண்டிய கட்டுப்பாடும் இல்லை. அப்படி இருந்தும் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் முட்டி
மோதிக் கொள்ளவில்லை என்றும், இதற்கு முக்கிய காரணம் வருகிற 30-ந் தேதி வரை அந்த நோட்டுகளை மாற்றி கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டு இருப்பது தான் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பெங்களூருவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பெரிய பெரிய ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் கொடுத்து வருவதாக உரிமையாளர்கள்
தெரிவித்துள்ளனர். ரூ.100, ரூ.200-க்கு பெட்ரோல் போட்டு விட்டு ரூ.2 ஆயிரத்தை கொடுப்பதாகவும், செப்டம்பர் 30-ந் தேதி வரை அவகாசம் இருப்பதால் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும்
வாங்கி கொள்வதாக உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுபோல் தான் ஓட்டல்களிலும்
ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு செல்வதாக பெங்களூரு
ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.