எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை


எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி சோமண்ணா விவகாரத்தில் எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு:-

புறக்கணிக்க முடியாது

பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கும், வீட்டு வசதி மந்திரி சோமண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை சோமண்ணாவே தெரிவித்துள்ளார். ஒரு கூட்டத்தில் தான் பல முறை வணக்கம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்று சோமண்ணா கூறினார். இது தொடர்பாக டெல்லிக்கு சென்ற சோமண்ணா அங்கு மேலிட தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு கர்நாடகம் திரும்பியுள்ளார். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா மேலிடம் மந்திரி சோமண்ணாவை நேரில் அழைத்து பேசியுள்ளது. அதனால் எல்லாம் சரியாகிவிடும். இனி எந்த குழப்பமும் எழாது. சோமண்ணாவை நான் நேரில் சந்தித்து 3 மாதங்கள் ஆகிறது. யாரும் யாரையும் புறக்கணிக்க முடியாது. எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனது மகன் விஜயேந்திரா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

நான் கவலைப்படவில்லை

சோமண்ணாவும் கட்சி பணியாற்றி வருகிறார். அனைவரும் கட்சிக்காக உழைக்க வேண்டும். கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். மற்ற விஷயங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்துவதால் கட்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். அதிருப்தியை சரிசெய்யும் பணியை கட்சி மேலிட தலைவர்கள் செய்கிறார்கள்.

அனைத்து சமூகங்களையும் சமமாக பார்க்க வேண்டும். லிங்காயத்துகள் ஓட்டு தேவை இல்லை என்று சி.டி.ரவி கருத்து கூறி இருந்தால் அது தவறு. இதுபற்றி அவருடன் பேசுகிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story