மாடல் அழகியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை
வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாடல் அழகி புகார் அளித்திருந்தார். மாடல் அழகியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பாலியல் தொல்லை கொடுத்ததாக...
பெங்களூருவில் மாடல் அழகியாகவும், துணை நடிகையாகவும் ஒரு பெண் இருந்து வருகிறார். அந்த பெண் ஹெண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், தான் கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி எலகங்கா அருகே ஜக்கூர் விமான நிலைய பகுதியில் இருந்து கே.ஆர்.புரத்தில் உள்ள தோழியின் வீட்டுக்கு வாடகை மோட்டார் சைக்கிளில் சென்றேன். அந்த மோட்டார் சைக்கிளை மஞ்சுநாத் ஓட்டினார்.
அவ்வாறு செல்லும் வழியில் மஞ்சுநாத் தன்னிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்தார் எனறு கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில், அந்த பெண், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மீது பொய் புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை
பெங்களூருவை சேர்ந்த பெண், வாடகை மோட்டார் சைக்கிளில் சென்ற போது, ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். அதன்பேரில், விசாரணை நடத்தியதில் அந்த பெண் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது. ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த பெண் வாடகை மோட்டார் சைக்கிளை புக் செய்துவிட்டு, பின்னர் ரத்து செய்திருந்தார். அந்த பெண் கூறிய நாளில் வாடகை மோட்டார் சைக்கிள் ஜக்கூரில் இருந்து கே.ஆர்.புரம் செல்லவில்லை.
மோட்டார் சைக்கிளில் உள்ள ஜி.பி.எஸ். கருவியை ஆய்வு செய்த போது, இதுபற்றிய தகவல் தெரிந்தது. அத்துடன் சம்பவம் நடந்ததாக கூறப்படும் தேதியில் அந்த ஓட்டுனர் தனது சொந்த ஊரான ராய்ச்சூரில் இருந்துள்ளார். ஓட்டுனர் மீது கூறும் குற்றச்சாட்டுக்கும், பெண் அளித்திருக்கும் தகவல்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. எனவே இதுபற்றி அந்த பெண்ணிடமும் விசாரிக்கப்படும். அந்த பெண் கூறிய குற்றச்சாட்டுகள் முதற்கட்ட விசாரணையில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது, என்றார்.