'சக்தி' திட்டத்தால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு இல்லை


சக்தி திட்டத்தால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு இல்லை
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் ‘சக்தி’ திட்டத்தால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு இல்லை என்று போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி கூறியுள்ளார்.

பெங்களூரு:-

இலவச பயணம்

பெங்களூருவில் நேற்று அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் 'சக்தி' திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி பேசியதாவது:-

'சக்தி' திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கும் திட்டம் இன்று(நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் வரும். அந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அப்போது இந்த இலவச பயண திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

அரசே செலுத்திவிடும்

பஸ் நிறுத்தங்களில் பஸ்களை கட்டாயம் நிறுத்த வேண்டும். இலவச பாஸ் வைத்திருக்கும் மாணவா்களை ஏற்றாமல் பஸ்கள் செல்வதாக ஏற்கனவே ஒரு புகார் உள்ளது. அத்தகைய புகார்கள் வராமல் போக்குவரத்து ஊழியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் வசிப்பதற்கான ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி பெண்கள் பஸ்களில் பயணிக்கலாம்.

அடுத்த 3 மாதங்களுக்குள் 'ஸ்மார்ட் கார்டு' பெண்கள் பெற வேண்டும். இதற்கு ஆகும் செலவை அரசே ஏற்றுக்கொள்கிறது. அனைத்து தரப்பு பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சக்தி திட்டத்தால் போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்படாது. பெண்கள் பயணத்திற்கான தொகையை அரசே செலுத்திவிடும்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி பேசினார்.


Next Story