விஜயேந்திரா முதல்-மந்திரி ஆவதில் தவறு இல்லை- மந்திரி முருகேஷ் நிரானி பேட்டி
விஜயேந்திரா முதல்-மந்திரி ஆவதில் தவறு இல்லை என்று மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.
விஜயாப்புரா: விஜயாப்புராவில் நேற்று மந்திரி முருகேஷ் நிரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தவறாக பேசுவது சரியல்ல. எடியூரப்பா பா.ஜனதாவின் முக்கியமான தலைவர். விஜயேந்திரா தான் அடுத்த முதல்-மந்திரி என்று பா.ஜனதாவினர் கூறி வருவதுபற்றி கேட்கிறீர்கள். அவர், முதல்-மந்திரி ஆவதில் தவறு இல்லை. ஒரு முதல்-மந்திரியின் மகன், முதல்-மந்திரி ஆவதில் என்ன தவறு இருக்கிறது. நமது மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமரின் மகன், முதல்-மந்திரியாக 2 முறை இருந்துள்ளார். விஜயேந்திராவிடம் தலைமை பண்பு அதிகம் உள்ளது. அவர், முதல்-மந்திரியாவதில் தவறு இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.
பா.ஜனதாவில் தற்போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. விஜயேந்திரா வளர்ந்து வரும் தலைவர். அவருக்கு என்ன பதவி வழங்க வேண்டும் என்பது பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.