பெங்களூருவில் ஆலங்கட்டி மழை பெய்தது


பெங்களூருவில் ஆலங்கட்டி மழை பெய்தது
x

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பெங்களூருவில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் குளர்ச்சியான சூழல் உருவானதால் மக்கள் மகிழ்ந்தனர்.

பெங்களூரு:-

கடுமையான வெப்பம்

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. எனினும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. நேற்று பெங்களூருவில் காலை நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் உருவானது. ராஜாஜிநகர், ஜெயநகர், ஜே.பி.நகர். பனசங்கரி சாந்திநகர், சாம்ராஜ்பேட்டை, சிட்டி மார்க்கெட், உத்தரஹள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

மரங்கள் முறிந்து விழுந்தது

அனந்தராவ் சர்க்கிள் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் அங்கிருந்த மரக்கிளை முறிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில் காரின் மேல் பகுதி சேதமடைந்தது. எனினும் கார்களில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அரேஹள்ளி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. பெங்களூரு மாநகராட்சி அருகே சாலையில் சென்ற பி.எம்.டி.சி. பஸ் மீது மரம் முறிந்து விழுந்தது. எனினும் பயணிகள் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். தொடர் மழையால் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மழை காரணமாக சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற ஆம்புலன்சு போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால் நோயாளி பாதிக்கப்பட்டார்.

மேலும் 5 நாட்கள்

இந்த பலத்த மழையால் சாலைகள் முழுவதும் சின்ன, சின்ன பனிக்கட்டிகள் குவிந்து கிடந்தது. சிறுவர்கள் அதை எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் பல்லாரி, சித்ரதுர்கா, துமகூரு, தாவணகெரே, மைசூரு, ஹாசன், ராமநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. அடுத்த 5 நாட்களுக்கு பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Next Story