வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை
வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறினார்.
மங்களூரு:-
சிலை திறப்பு விழா
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பாவட்டகுட்டே பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் கேதம்பாடி ராமையா கவுடாவின் சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூரு அருகே உள்ள பஜ்பே சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடக கடலோர மாவட்டங்களில் ஏராளமான வளங்கள் உள்ளன. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு வர உள்ளன. ரூ.1.50 முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வெளிநாட்டு முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது.
3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
இதற்காக 3 நிறுவனங்களிடம் ஒப்பந்தமும் போடப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனங்கள் அடுத்த ஆண்டு(2023) மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தங்களது பணிகளை தொடங்குவார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. கடல் நீரில் இருந்து அமோனியா தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைய இருக்கிறது. விரைவில் அந்த தொழிற்சாலை அமைவதற்கான பணிகள் தொடங்கும்.
பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்துள்ளது. அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்த சாலை தொடர் மழை காரணமாக சேதமடைந்துவிட்டது. இதுபற்றி ஓரிரு நாட்களில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவேன். அடுத்த வாரம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளேன்.
நிரந்தர தீர்வு
டெல்லி சென்றதும் இதுபற்றி மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியிடம் பேசி நிரந்தர தீர்வு காண்பேன். உடனடியாக பெங்களூரு-மங்களூரு சாலை சீரமைக்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். ஒவ்வொரு வருடமும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் பரிசீலனை செய்யப்படும். அதுபோல்தான் இந்த வருடமும் நடந்துள்ளது.
அதில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் சேர்க்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்றவர்கள், ஊரை காலி செய்துவிட்டு சென்றவர்கள் போன்றோரின் பெயர்கள் நீயக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒருசிலருக்கு 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும். அவற்றை எல்லாம் சரி செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் பணி
ஊழல்வாதிகளுக்கு...
வாக்காளர் அட்டை விவகாரத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. எந்த தவறும் நடக்கவில்லை என்பதை உறுதியாக என்னால் கூற முடியும். முறைகேடு நடந்ததற்கான சாட்சியங்களும் இல்லை. இருப்பினும் காங்கிரசார் இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இதுபோன்ற ஒரு விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தியபோது அது ஊழல் வாதிகளுக்குத்தான் சாதகமாக அமைந்தது.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துவார்கள். ஒருவேளை தவறு நடந்திருந்தால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
தன்னலமற்ற போராளி
இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கார் மூலம் பாவட்டகுட்டே பகுதிக்கு சென்றார். அங்கு சுதந்திர போராட்ட வீரர் கேதம்பாடி ராமையா கவுடாவின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
இன்று மங்களூருவுக்கு முக்கியமான நாள். வரலாற்றுக்கு முக்கியத்துவம் மிக்க நாள். இதுவரை வெளிவராத ராமையா கவுடாவின் வரலாறு தற்போது செய்திகளில் வெளியாகியுள்ளது. ராமையா கவுடாவை ஆங்கிலேயர்களால் தோற்கடிக்க முடியவில்லை. முடிவில் அவரை வஞ்சகத்தின் மூலம் பிடித்து தூக்கிலிட்டனர். அவரது போராட்ட வரலாறு நாடு முழுவதும் தெரிய வேண்டும். அவரது சிலை நிறுவப்பட்டதன் மூலம் அவருடைய வரலாறு உலகம் முழுவதும் அறியப்படும். அவரை நினைவுகூர்ந்து அவருடைய திறமை, கொள்கை, வீரத்தை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறுவதில் பெருமை அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் மந்திரி அஸ்வத் நாராயண் பேசும்போது கூறியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர் ராமையா கவுடா ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். அவர் ஒரு தன்னலமற்ற போராளி. நம் கடைசி மூச்சு உள்ளவரை அவரை நாம் போற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.