வீடு புகுந்து தம்பதி-மகனை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை
சிந்தாமணியில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் நடித்து வீடு புகுந்து தம்பதி மற்றும் அவர்களது மகனை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
கோலார் தங்கவயல்:
திருமண அழைப்பிதழ்...
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சான்றஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதம்மா(வயது 50). இவரது கணவர் நாராயணசாமி. இவர்களின் மகன் ஆகாஷ்ரெட்டி. இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டதும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 10.30 மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பல் உறவினர்களை போல் நடித்து திருமண அழைப்பிதழ் கொண்டு வருவதாக கூறி கதவை தட்டி உள்ளனர்.
அதை நம்பிய சரஸ்வதம்மா மற்றும் நாராயணசாமி ஆகியோர் கதவை திறந்துள்ளனர். உடனே உள்ளே அதிரடியாக நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் உள்ள 3 பேரையும் தாக்கி கட்டிப் போட்டுள்ளனர். அப்போது நாராயணசாமி கூச்சலிட்டார்.
கத்திக்குத்து
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் நாராயணசாமியை கத்தியால் குத்தினர். அதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர், பீரோவில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். மர்ம நபர்கள் சென்றதும் வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடிவந்து பார்த்தனர். பின்னர் காயம் அடைந்த நாராயணசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிந்தாமணி புறநகர் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.