தொழிலாளர்களுக்கு, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தால் நடவடிக்கை
வெளிமாநிலங்களில் இருந்து சிக்கமகளூருவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கணினி மையங்களின் உரிமையாளர்களுக்கு கலெக்டர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிக்கமகளூரு;
அதிகாரிகளுடன் ஆலோசனை
சிக்கமகளூருவில் போலி அடையாள அட்டை தயாரித்து கூலி தொழிலாளர்களுக்கும், அதை தவறாக பயன்படுத்துவோருக்கும் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கும் சென்றது. அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நேற்று சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ், தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் தொழிலாளர் துறை, போலீஸ் துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
சிக்கமகளூரு மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு, சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள கணினி மையங்கள் வைத்திருப்பவர்கள் சட்டவிரோதமாக அடையாள அட்டைகளையும், போலி ஆதார் அட்டைகளையும் தயாரித்து கொடுப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதன்மூலம் அந்த தொழிலாளர்கள் அரசின் சலுகைகளை முறைகேடாக பெற்று வருகிறார்கள்.
இதை கண்டுபிடிக்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். போலி அடையாள அட்டை மற்றும் போலி ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுப்பவர்கள் யாரேனும் சிக்கினால் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதி.
அரசின் விதிமுறைப்படி...
இதை கணினி மையங்களின் உரிமையாளர்களும், அங்கு பணியாற்றுபவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசின் விதிமுறைப்படி சரியான ஆவணங்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டைகளை தயாரித்து கொடுக்க வேண்டும். இதுபோன்ற முறைகேடுகளில் யாரும் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.