பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 3 கட்டமாக பரிசோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 3 கட்டமாக பரிசோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறையில் கைதிகள் முறைகேடு
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறைக்குள் வைத்தே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவது, செல்போன்கள் பயன்படுத்துவது, கைதிகளுக்கு இடையே மோதிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது.
குறிப்பாக கைதிகளுக்கு வெளியில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அவர்களை சந்திக்க செல்லும் உறவினர்கள் கொண்டு செல்வதாகவும், இதற்கு சிறை ஊழியர்களே உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சிறையில் கைதிகள் கஞ்சா, செல்போன் பயன்படுத்தியதாக இந்த ஆண்டு மட்டும் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 கட்டமாக பரிசோதனை
இதுதவிர சிறையில் கைதிகள் மோதிக் கொள்வதால், 38 பேர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகள் முறைகேடுகளில் ஈடுபடுபடுவதை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக மூத்த போலீஸ் அதிகாரி, சிறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருட்களை சிறைக்குள் கடத்தி செல்வதை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பரிசோதனையையும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது சிறையின் முக்கிய நுழைவு வாயில், வாகனங்கள் செல்லும் பகுதி, பார்வையாளர்கள் நுழைவு பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 கட்டமாக பரிசோதனை நடத்த உள்ளனர். இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிறைக்குள் வரும் கைதிகள், பார்வையாளர்கள், சிறைக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், சிறைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் என அனைவரிடமும் முழுமையான சோதனை நடத்திய பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். இதன்மூலம் கைதிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.