குடியரசு தின விழாவையொட்டி பலத்த பாதுகாப்புகர்நாடகத்தில் தீவிர கண்காணிப்பு
குடியரசு தின விழாவையொட்டி கர்நாடகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரெயில், பஸ் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
குடியரசு தினவிழா
பெங்களூரு மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் கர்நாடக அரசு சார்பில் வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவுக்கு பயங்கரவாத அமைப்புகளால் தொடர்ந்து மிரட்டல் இருந்து வருகிறது. இதன்காரணமாக சுதந்திர தினம், குடியரசு தினத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்த நிலையில், வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழா நடைபெற உள்ள சந்தர்ப்பத்தில் டெல்லியில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, குடியரசு தினத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க நாடு முழுவதும் முன்எச்சரிக்கையாக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் குடியரசு தினத்தையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் உத்தரவு
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவின் பேரில் நேற்று பெங்களூருவில் முக்கிய பகுதிகளில் போலீசார் திடீரென்று சோதனை நடத்தினார்கள். மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தலைமையில், பெங்களூரு நகரில் உள்ள ரெயில், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் இந்த சோதனையை நடத்தி இருந்தார்கள்.
இணை கமிஷனர் சரணப்பா தலைமையில் 6 துணை போலீஸ் கமிஷனர்கள், 10 உதவி போலீஸ் கமிஷனர்கள், 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 220 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் மெஜஸ்டிக் பஸ் நிலையம், சிட்டி ரெயில் நிலையங்களில் போலீசார் சோதனை நடந்தது.
ரெயில், பஸ் நிலையங்களில் சோதனை
பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள், அங்கு வந்த வாகனங்கள், வாகனம் நிறுத்தும் பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களில் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். பெங்களூரு சிட்டி, யஸ்வந்தபுரம், கன்டோன்மெண்ட் ரெயில் நிலையங்கள், சாந்திநகர், சேட்டிலைட், ஜெயநகர் பஸ் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் குடியரசு தினத்தையொட்டி முன்எச்சரிக்கையாக போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.
இதுதவிர பெங்களூரு நகரில் இருக்கும் முக்கிய ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகளிலும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகளில் கடந்த சில நாட்களாக அறைகள் எடுத்து தங்கி இருப்பவர்கள் தகவல்களையும் போலீசார் பெற்றுக் கொண்டனர். சந்தேகப்படும் படியாக யாரும் அறை எடுத்து தங்கி இருக்கிறார்களா? என்றும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.
24 மணிநேரமும் கண்காணிப்பு
அதே நேரத்தில் குடியரசு தினத்தையொட்டி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ரெயில், பஸ் நிலையங்களுக்கு வருபவர்களை கண்காணிக்க அங்கு முன் எச்சரிக்கையாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில், பஸ் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியரசு தினத்தையொட்டி பெங்களூருவில் நேற்று திடீரென்று போலீசார் சோதனை நடத்தியதால் ரெயில், பஸ் நிலையங்கள் பரபரப்பாக காணப்பட்டது.
112-க்கு தகவல் தெரிவிக்கலாம்
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா கூறுகையில், 'குடியரசு தினவிழாவையொட்டி முன்எச்சரிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. வருகிற 26-ந் தேதி வரை தினமும் இந்த சோதனை நடைபெறும். குறிப்பாக ரெயில், பஸ் நிலையங்கள் முழுமையாக கண்காணிக்கப்படும்.
பெங்களூருவில் சந்தேகப்படும் விதமாக ஏதாவது நபர்கள் சுற்றி திரிந்தாலோ, ஏதேனும் மர்ம பொருட்கள் கிடந்தாலோ அதுபற்றி பொதுமக்கள் உடனடியாக 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
மாநிலம் முழுவதும் கண்காணிப்பு
மேலும் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, தட்சிணகன்னடா, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா உள்பட மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் அனைத்து பஸ், ரெயில் நிலையங்களிலும், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் போலீஸ் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவையொட்டியும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில முழுவதும் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.