டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும்
டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரி ஒக்கலிகர் சங்க கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
ஒருமனதாக தீர்மானம்
கா்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் போட்டியில் உள்ளனர். டி.கே.சிவக்குமார் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்கும் நிலையில் சித்தராமையா குருபா சமூகத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் ஒக்கலிகர் சமூக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதிகள் நிர்மலானந்தநாத சுவாமி, நஞ்சாவதூத சுவாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் புதிதாக எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒக்கலிகர் சமூக எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குமாறு கோரி ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிக தொகுதிகளில் வெற்றி
இந்த கூட்டத்தில் பேசிய நஞ்சாவதூத சுவாமி, "கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஒக்கலிகர் சமூகம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துள்ளது. மேலும் கட்சிக்காக டி.கே.சிவக்குமார் கடுமையாக உழைத்துள்ளார். பகல்-இரவாக கஷ்டப்பட்டு உழைத்து காங்கிரசை வெற்றி பெற வைத்துள்ளார். சித்தராமையா 5 ஆண்டுகள் காலம் முதல்-மந்திரியாக இருந்தார். அவர் அனைத்து சமூகங்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். அதனால் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி வாய்ப்பை வழங்க வேண்டும்" என்றார்.