நடிகர் சுதீப்புடன் டி.கே.சிவக்குமார் திடீர் சந்திப்பு
நடிகர் சுதீப்பை நேரில் சந்தித்து பேசிய டி.கே.சிவக்குமார், காங்கிரசுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூரு:
பஞ்சரத்னா யாத்திரைகள்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா உள்பட அரிசியல் கட்சிகள் யாத்திரைகள் பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா ஜனசங்கல்ப, விஜயசங்கல்ப யாத்திரைகள், காங்கிரஸ் மக்கள் குரல் யாத்திரை மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சி பஞ்சரத்னா யாத்திரைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கன்னட திரைத்துறையில் முன்னணி கதாநாயக நடிகர்களில் ஒருவராக சுதீப் திகழ்கிறார். அவர் கன்னடம் மட்டுமின்றி தமிழ் உள்பட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதனால் தென்இந்திய மாநிலங்களில் அவர் பிரபலமாக திகழ்கிறார். சுதீப்புக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. மேலும் அவர் பழங்குடியின சமூகம் அதாவது வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர்.
கொள்கை-கோட்பாடுகள்
அந்த சமூகத்தினர் பெலகாவி, சித்ரதுர்கா, விஜயாப்புரா, கலபுரகி உள்ளிட்ட வட கர்நாடகத்தில் பரவலாக உள்ளனர். அதனால் நடிகர் சுதீப்பை காங்கிரசுக்கு இழுக்க அக்கட்சி தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே அவரை நடிகை ரம்யா நேரில் சந்தித்து, காங்கிரசுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் சுதீப்பை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அண்மையில் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சுதீப்பை அவர் சந்தித்த படம் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, காங்கிரசில் சேருமாறு சுதீப்புக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். ஒருவேளை அவர் காங்கிரசுக்கு வந்தால், சித்ரதுர்கா அல்லது பெலகாவி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் அவரை போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நடிகர் சுதீப் காங்கிரசுக்கு வந்தால், அவர் சார்ந்த வால்மீகி சமூகத்தின் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற முடியும் என்று அக்கட்சி தலைவர்கள் நம்புகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி, நடிகர் சுதீப் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்று காங்கிரசுக்கு வந்தால், அவரை நாங்கள் வரவேற்போம்" என்றார்.