சிறுமிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க போலீசாருக்கு உத்தரவு; மந்திரி ஹாலப்பா ஆச்சார் தகவல்


சிறுமிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க போலீசாருக்கு உத்தரவு;  மந்திரி ஹாலப்பா ஆச்சார் தகவல்
x

சிக்கமகளூரு மாவட்டத்தில் வாரத்தில் ஒருநாள் சிறுமிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு இருப்பதாக மந்திரி ஹாலப்பா ஆச்சார் கூறினார்.

சிக்கமகளூரு;

ஆலோசனை கூட்டம்

சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில கனிமவளம், கைத்தொழில், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார் தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்த பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு யாரேனும் முன்வந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்து கொடுக்கும்.

அதுபோல் கல்குவாரி அமைக்க யாரேனும் திட்டமிட்டால் அதுபற்றி உடனடியாக மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை, விவசாயத்துறை ஆகிய துறைகளிடம் தெரிவிக்க வேண்டும்.

புதிய அங்கன்வாடி கட்டிடங்கள்

அப்படி செய்தால் உடனடியாக அவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும். கல்குவாரி அமைக்க திட்டமிடுபவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறுவது முக்கியம். கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கால்வாய்களில் மணல் அள்ளுவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

அவ்வாறு செய்வதால் கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மாவட்டத்தில் மொத்தம் 1,825 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கழிவறைகள் அமைத்து கொடுக்கவும், காம்பவுண்டு சுவர் அமைத்து கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தை உள்ள தாய்மார்களுக்கு வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கவும் உத்தரவிட்டு இருக்கிறேன்.

தற்காப்பு பயிற்சி

கொரோனா முதல் அலை ஆரம்பித்தது முதல் சிக்கமகளூரு மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடந்துள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திராவுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

அவரும் இப்பணியை திறம்பட செய்து குழந்தை திருமண சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். வாரத்தில் ஒருநாள் சிறுமிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் மாவட்ட கலெக்டர் ரமேஷ், மாவட்ட முதன்மை செயல் அதிகாரி பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story