சட்டவிரோத கட்டிடங்களை முறைப்படுத்த 'அக்ரம-சக்ரம' திட்டம் அமல்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
பெங்களூருவில் சட்டவிரோத கட்டிடங்களை முறைப்படுத்த 'அக்ரம-சக்ரம' திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு: பெங்களூருவில் சட்டவிரோத கட்டிடங்களை முறைப்படுத்த 'அக்ரம-சக்ரம' திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கால்வாய் பணிகள்
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம், பெங்களூரு சுற்று வட்ட சாலை திட்டத்திற்கு வருகிற 20-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த 2 முக்கிய திட்டங்கள் நிறைவேறினால் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறையும். பட்ஜெட்டில் பெங்களூரு வளர்ச்சிக்கு ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ரூ.1,600 கோடியில் மழைநீர் கால்வாய் மேம்பாட்டு பணிகளை தொடங்க இருக்கிறோம்.
மழை நின்றவுடன் இந்த பணிகள் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு மழை வந்தால் மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்ட பணிகள் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றப்படும். பெங்களூருவில் சட்டவிரோத கட்டிடங்களை முறைப்படுத்த அக்ரம-சக்ரம திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தீர்வு கிடைக்கும்
சுப்ரீம் கோர்ட்டில் தேவையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். காந்தி பஜாரில் அடுக்குமாடி வாகன நிறுத்த கட்டிடம் கட்டப்படுகிறது.
பெங்களூரு பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. நாளுக்கு நாள் நகரின் எல்லை விரிவடைந்து செல்கிறது. நகரை திட்டமிட்ட வகையில் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.