சர்வதேச விமான கண்காட்சியையொட்டி எலகங்கா விமானப்படை தளத்திற்கு
சர்வதேச விமான கண்காட்சியையொட்டி எலகங்கா விமானப்படை தளத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று பி.எம்.டி.சி. தெரிவித்துள்ளது.
பெங்களூரு:-
சர்வதேச விமான கண்காட்சி
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) சர்வதேச விமான கண்காட்சி தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இன்று தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை விமான கண்காட்சி நடக்கிறது. இதில் 80 நாடுகளை சேர்ந்த விமானங்கள் கலந்து கொண்டு சாகசங்கள் நிகழ்த்த உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த கண்காட்சியை காண முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் உள்பட 3 லட்சம் பேர் வருகை தருவார்கள் என தெரிகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் வசதிக்காக பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலகங்கா விமானப்படை தள பகுதிக்கு கூடுதல் பஸ் சேவை வழங்க பி.எம்.டி.சி. முடிவு செய்துள்ளது.
கூடுதல்கள் பஸ்கள் இயக்கம்
இதுகுறித்து பி.எம்.டி.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெறும் விமான கண்காட்சியை கண்டு ரசிக்க ஏராளமான மக்கள் முன்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தங்கு தடையில்லாத சேவையை வழங்க கூடுதல் பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சேவை வருகிற 17-ந் தேதி வரை வழங்கப்படும். அதன்படி மெஜஸ்டிக் பஸ் நிலையம், யஷ்வந்தபுரம், சாந்திநகர், கோரமங்களா, ஜெயநகர், கெங்கேரி ஆகிய பகுதிகளில் இருந்து பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கபடுகின்றன. ஒரு முறை பயணத்திற்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பி.எம்.டி.சி. சார்பில் கூறப்பட்டுள்ளது.