உப்பள்ளியில் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.59 லட்சம் மோசடி
ஆன்லைனில் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.59 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தார்வாரில் நடந்துள்ளது.
உப்பள்ளி-
ஆன்லைனில் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.59 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தார்வாரில் நடந்துள்ளது.
தனியார் நிறுவன மேலாளர்
தார்வார்(மாவட்டம்) டவுன் குமாரேஷ்வரா நகரை சேர்ந்தவர் ஹசன்சாப் முல்லா. இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறினார். அதில் ஒரு நாளைக்கு தலா ரூ.2500 முதல் ரூ.4 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் ஹசன்சாப்பிடம் மர்ம நபர் கூறியுள்ளார்.
அதனை நம்பிய ஹசன்சாப் மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.4 ஆயிரம் அனுப்பினார். இதையடுத்து மர்ம நபர் ஹசன்சாப்பிற்கு ரூ.5 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.
ரூ.59 லட்சம் மோசடி
பின்னர் மர்மநபருக்கு அவர் பல்வேறு தவணைகளாக ரூ.59 லட்சத்தை அனுப்பி உள்ளார். பின்னர் மர்மநபர் ஹசன்சாப்பிற்கு பணம் அனுப்பவில்லை. இதுகுறித்து அந்த நபருக்கு ஹசன்சாப் தொடர்பு கொண்டார். ஆனால் அவரின் செல்போன் எண் சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் மோசடி வலையில் சிக்கியதை உணர்ந்த ஹசன்சாப் உப்பள்ளி -தார்வார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.