வரமகாலட்சுமி பண்டிகையையொட்டி கே.ஆர்.மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்
வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கே.ஆர்.மார்க்கெட்டில் நேற்று பூக்கள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது. விலை உயர்ந்திருந்தாலும் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
பெங்களூரு:-
வரமகாலட்சுமி பண்டிகை
கர்நாடகத்தில் ஆண்டுதோறும் வரமகாலட்சுமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான வர மகாலட்சுமி பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
மகாலட்சுமி என்றால் நித்திய சுமங்கலி என்று பொருள். எனவே தான் பெண்கள் வரமகாலட்சுமி விரதம் இருந்து வருகிறார்கள். இந்த விரதத்தை கடைப்பிடித்து வீட்டில் வரமகாலட்சுமி பூஜை செய்தால் தாலி பாக்கியம் நீடிக்கும் என்பதும், கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பதும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் பெண்கள் வர மகாலட்சுமி விரதம் இருந்து பூஜை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கூட்டம் அலைமோதியது
இன்று கொண்டாடப்படும் வரமகாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு கே.ஆர். மார்க்கெட்டில் நேற்று பூக்கள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்தது. அதிகாலை 3 மணிக்கே வியாபாரிகளும், பொதுமக்களும் மார்க்கெட்டில் குவிந்தனர். வழக்கத்தைவிட பூக்கள், பழங்கள், தேங்காய், இலை உள்ளிட்டவற்றின் விலை இருமடங்காக இருந்தது. இருப்பினும் பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் கே.ஆர்.மார்க்கெட்டில் அலைமோதியது.
போக்குவரத்து நெரிசல்
இதனால் கே.ஆர் மார்க்கெட் முன்பகுதியில் உள்ள அவென்யூ ரோடு, கலாசிபாளையம் பஸ் நிலைய ரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. நேற்று காலை முதல் மாலை வரை கே.ஆர்.மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
விலை விவரம்
கே.ஆர்.மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்கள், பழங்கள் விலை விவரம் பின்வருமாறு:-
நேற்றைய நிலவரப்படி கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.1,500-க்கும், மல்லிகை ஒரு கிலோ ரூ.800-க்கும், ரோஜா பூக்கள்- ரூ.200-க்கும் சிறிய பூமாலை- ரூ200-க்கும், பெரிய பூமாலை ரூ.500-க்கும், ஒருஜோடி தாமரைப்பூ- ரூ.100-க்கும், ஏலக்கி பழம் கிலோ ரூ.140-க்கும், ஆப்பிள்-ரூ.300-க்கும், திராட்சை ரூ.200-க்கும், ஆரஞ்சு ரூ.200-க்கும் அன்னாசி பழம் ஒன்று ரூ.80-க்கும் மாதுளை பழம் கிலோ ரூ.200-க்கும் விற்பனை ஆனது.அதுபோல் ஒரு ஜோடி வாழைமரக்கன்று ரூ.50-க்கும், மா இலை ரூ.20-க்கும், வெற்றிலை ஒருகட்டு ரூ.100 முதல் ரூ.150-க்கும், 5 தேங்காய் ரூ.100-க்கும் விற்பனை ஆனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வரமகாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு தேவை அதிகரிப்பால் பூக்கள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் வரமகாலட்சுமி பூஜை காரணமாக விலை இருமடங்காக உயர்ந்துள்ளது என்றனர்.