இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு..! மத்திய அரசு தகவல்
இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
இதுவரை இல்லாத அதிகபட்ச உயர்வாக உள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும்.
இந்தியாவின் ஜுன் மாத ஏற்றுமதி 16.8 சதவீதம் அதிகரித்து 3,790 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றுமதியாகும். அதே நேரத்தில் இறக்குமதி 51.02 சதவீதம் அதிகரித்து 6,358 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஜுன் மாதம், வர்த்தகப் பற்றாக்குறை 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.
2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 22.2 சதவீதம் அதிகரித்து 11,670 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றுமதியாகும்.
முதல் காலாண்டில் பெட்ரோலியம் அல்லாத ஏற்றுமதி 11.9 சதவீதம் அதிகரித்து 9,250 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.
பெட்ரோலிய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் 2022-23 முதல் காலாண்டில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஏப்ரல் - ஜூன் 2022-23 இல் வர்த்தகப் பற்றாக்குறை 7,025 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.மே மாதத்தில் இருந்ததை விட, ஜூன் மாதத்தில் ஏற்றுமதி அளவு குறைந்தும் இறக்குமதி அளவு அதிகரித்தும் காணப்பட்டது.
இதன்காரணமாக, 2ம் காலாண்டில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 முதல் 81 ஆக பலவீனமடையலாம் என்று "இந்தியாவின் முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் லிமிடெட்(ஐ.சி.ஆர்.ஏ)" தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள், குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ஆகியவற்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜி.டி.பி), 'நடப்பு கணக்கில்' ஏற்படும் பற்றாக்குறை 3 சதவீதத்தை தாண்டுவதை தடுக்க உதவும்.
ஆனால், இது ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதையும் மற்றும் பெரிய அளவில் 'நடப்பு கணக்கில்' ஏற்படும் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற கவலைகளை எழுப்புகிறது" என்று தெரிவித்தார்.