ரெயில் விபத்து - 125 ரெயில் சேவைகள் இன்று ரத்து
கோரமண்டல் ரெயில் சென்னையிலிருந்து 3 மணி நேரம் தாமதமாக (10.45-க்கு) புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, ஒதுக்கப்பட்ட வழிதடத்தில் இருந்து மாறிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மாற்று ரெயில் தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது, அப்போது அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரெயில் கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
3 ரெயில்கள் விபத்துக்குள்ளான இந்த சம்பவத்தில் மொத்தம் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை அகற்றும் பணிகளும் அவ்வழியாக மீண்டும் ரெயில்களை இயக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விபத்து நடந்து 51 மணி நேரத்திற்கு பின் விபத்து நடந்த தண்டவாளம் வழியாக மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்ட நிலையில் விபத்து நடந்த பகுதி வழியாக சோதனை முறையில் ரெயில் இயக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் நேற்று முன்தினம் முதல் தங்கியுள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், கோரமண்டல் ரெயில் விபத்து காரணமாக தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் காரணமாக ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒடிசா வழியாக கடந்து செல்லும் 125 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 56 விரைவு ரெயில்கள் வேறு பாதை வழியே செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான இடத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து 2 நாட்களில் ரெயில் பாதைகள் பயன்பாட்டிற்கு வரும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை-சாலிமர் கோரமண்டல் ரெயில் சென்னையிலிருந்து 3 மணி நேரம் தாமதமாக (10.45-க்கு) புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.