பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மை
கர்நாடகத்தில் பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுவதாக வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா கூறியுள்ளார்.
பெங்களூரு:-
வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மக்களுக்கு கொடுத்துள்ளோம்
பெங்களூருவில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு வீட்டு உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்களுக்காக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. இதில், ஒற்றை படுக்கை வசதியுடன் 52 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் 493 ஏக்கர் நி
லத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன. எலகங்காவில் உள்ள முத்தேனப்பள்ளி, ஆனேக்கல், கே.ஆர்.புரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் 2,300 வீடுகள் தகுதியான பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
சித்தாப்பூர், உப்பள்ளி, உடுப்பி, கோவிந்தராஜ் நகர், சிரா, பங்காருப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் 7 ஆயிரத்து 746 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. வீட்டு வசதித்துறை வீடுகளே கட்டவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், நாங்கள் வீடுகளை கட்டி மக்களுக்கு கொடுத்துள்ளோம்.
இரட்டை படுக்கை வசதி
எனது 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் வீட்டு வசதித்துறையில் யாரும் இந்த அளவுக்கு வீடுகள் கட்டியது இல்லை. எடியூரப்பா என்னை வீட்டு வசதி மந்திரி ஆக்கினார். ஹாசனில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எங்கள் பா.ஜனதா அரசு பாடுபட்டு வருகிறது. பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்குவதிலும் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுகிறோம். பிரதமர் அவாஸ் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 426 வீடுகளை கட்டி பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8,381 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
கைவினை கலைஞர்களுக்கு இரட்டை படுக்கை வசதியுடன் கூடிய வீடுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். மூன்று லட்சம் வீட்டு உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கி, வீட்டு உரிமையாளர்களாக அறிவித்துள்ளோம். வீடுகள் பெற முன்பு ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டி இருந்தது. அதனை தற்போது ரூ.50 ஆயிரமாக குறைத்துள்ளோம். வீடுகள் கட்டி முடித்தவுடன் கூடிய விரைவாக வீட்டு சாவி பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சோமண்ணா கூறினார்.