விஜய திவஸ் தினத்தையொட்டி போர் நினைவு சின்னத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அஞ்சலி


விஜய திவஸ் தினத்தையொட்டி போர் நினைவு சின்னத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அஞ்சலி
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விஜய திவஸ் தினத்தையொட்டி பெங்களூருவில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தினார்.

பெங்களூரு:

அஞ்சலி செலுத்தினார்

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 16-ந் தேதி விஜய திவஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று விஜய திவஸ் தினத்தையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இதில் வங்காள தேச நாட்டை இந்தியா உருவாக்கி கொடுத்தது. கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போர்களில் கர்நாடக ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக தான் விஜய திவஸ் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. ராணுவ படைகளின் சேவை, புனிதமானது.

மனிதநேய சேவை

ராணுவத்தில் சேருவதற்கு முன்பு எல்லாவற்றையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். அதை தெரிந்து நாம் ராணுவத்தில் சேருகிறோம். நமக்கு வெற்றியை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து பெற்று தருகிறார்கள். ஆனால் அதை பார்க்க அவர்கள் இருப்பது இல்லை. மிகப்பெரிய மனிதநேயத்தை கொண்ட சேவை தான் இந்த ராணுவ சேவை. மனிதர்களின் சமரசம் செய்து கொள்ளும் குணம் முக்கியமானது.

கடும் பனிப்பொழிவு மிகுந்த சூழ்நிலையிலும் அதை தாங்கி கொண்டு நமது நாட்டை ராணுவ வீரர்கள் காப்பாற்றுகிறார்கள். நாட்டை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். காயம் அடைந்த வீரர்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். எந்த நேரத்திலும் போருக்கு தயாராக இருக்கும் வகையில் வீரர்கள் மனரீதியாக தயாராக இருக்க வேண்டும்.

நல்ல வாழ்க்கை

எந்த நாடாக இருந்தாலும், சரி ஒரு அங்குலம் நமது நாட்டிற்குள் வந்தாலும் அவர்களை விரட்டியடிக்கும் பலம் இந்திய வீரர்களுக்கும், நமது பிரதமர் மோடிக்கும் உள்ளது. ராணுவ படைகளால் தான் நமது நாடு பாதுகாப்பாக உள்ளது. நாம் முன்னேற்றம் அடைய வேண்டும். நாட்டு மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கும் பொறுப்பு நம் மீது உள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, ராணுவத்தினர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை இயக்குனர் பிரிகேடியர் சசிதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story