பெண்களை நிர்வாணமாக காட்டும் அதிசய ‛மேஜிக் கண்ணாடி' ஆசையால் ரூ.9 லட்சம் ஏமாந்த முதியவர்


பெண்களை நிர்வாணமாக காட்டும் அதிசய ‛மேஜிக் கண்ணாடி ஆசையால் ரூ.9 லட்சம் ஏமாந்த முதியவர்
x

பெண்களை நிர்வாணமாக காட்டும் அதிசய ‛மேஜிக் கண்ணாடி' என கூறி ரூ.9 லட்சம் ஏமாற்றிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் அவினாஷ் குமார் சுக்லா (வயது 72). கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் அவரை தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் தங்களிடம் ‛மேஜிக் கண்ணாடி' ஒன்று உள்ளது. அந்த கண்ணாடியின் வழியே பார்த்தால் மற்றவர்கள் ஆடையின்றி நிர்வாணமாக தெரிவார்கள். அதோடு எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களையும் நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என கூறி உள்ளனர்.

இதை நம்பிய அவினாஷ் குமார் சுக்லா உடனடியாக அதனை வாங்க விருப்பம் தெரிவித்து ரூ.9 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை வாங்கி கொண்டு அவரை ஏமாற்றினர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் அவினாஷ் குமார் சுக்லாவிடம் மோசடி செய்த 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் எப்படி முதியவரை ஏமாற்றினார்கள் என்ற விவரம் தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பார்த்தா சிங்ரே. இவரது நண்பர்கள் மோலயா சர்க்கார், சுதிப்தா சின்ஹா ராய். இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ திட்டமிட்டனர். இதற்காக மோசடி வேலையில் இறங்கினர். அப்போது இவர்களிடம் சிக்கியவர் தான் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அவினாஷ் குமார் சுக்லா(72)

இவர்கள் 3 பேரும் அவினாஷ் குமார் சுக்லாவிடம் பேசும்போது, ''எங்களிடம் ஒரு அதிசயமான ‛மேஜிக் கண்ணாடி' உள்ளது . இந்த கண்ணாடியை பொதுவெளியில் மக்கள் யாரும் பயன்படுத்துவது இல்லை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும். இந்த கண்ணாடியின் சிறப்பு என்னவென்றால் இதன் வழியாக பார்த்தால் பெண்கள் உள்பட யாராக இருந்தாலும் ஆடையின்றி தெரிவார்கள். மேலும் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களையும் நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இந்த அதிசய மேஜிக் கண்ணாடியை விற்பனை செய்ய உள்ளோம்" என ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.

இதை கேட்ட அவினாஷ் குமார் சுக்லா, கண்ணாடியை வாங்கிக்கொள்ள முடிவு செய்தார். இருப்பினும் விலை தான் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவினாஷ் குமார் சுக்லா மற்றும் 3 பேரும் பேரம் பேசினர். அதில் கோடியில் இருந்து மேஜிக் கண்ணாடியின் விலையை லட்சத்தில் விற்பனை செய்ய 3 பேரும் ஒப்புக்கொண்டனர்.

அவினாஷ் குமார் சுக்லாவும், மேஜிக் கண்ணாடிக்காக ரூ.9 லட்சத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், அவர்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஓட்டலில் வந்து மேஜிக் கண்ணாடியை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அவரும் புறப்பட்டு சென்று அங்கு அவர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் ஒரு கண்ணாடியை கொடுத்து உள்ளனர். முதியவரும் கண்ணாடியை வைத்து பரிசோதித்து உள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி எதுவும் நடக்கவில்லை. அப்போது தான் அவினாஷ் குமார் சுக்லாவுக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் அவர்கள் கொடுத்த கண்ணாடி ‛மேஜிக் கண்ணாடி' இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

இதனால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்காமல் சாக்குபோக்கு கூறி உள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவினாஷ் குமார் சுக்லா சம்பவம் தொடர்பாக நயாபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் அவினாஷ் குமார் சுக்லாவை ஏமாற்றிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து ரூ.28 ஆயிரம் ரொக்கம், 5 செல்போன்கள் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story