உத்தவ் தாக்கரே அணியை தொடர்ந்து ஷிண்டே தரப்பும் சின்னம், பெயரை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை
உத்தவ் தாக்கரே அணியை தொடர்ந்து ஷிண்டே தரப்பும் தாங்கள் விருப்ப பட்டியலில் உள்ள ஒரு சின்னம், பெயரை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து உள்ளது.
மும்பை,
மராட்டிய பலமான கட்சிகளின் ஒன்றான சிவசேனா கடந்த ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. தற்போது அந்த கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. ஏக்நாத் ஷிண்டே வசம் பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். உத்தவ் தாக்கரேவிடம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிைலயில் அடுத்த மாதம் 3-ந் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார். இந்தநிலையில் இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில்,அம்பு சின்னத்தை ஒதுக்ககூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில்,அம்பு சின்னத்தை முடக்கியது. மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து உத்தவ் தாக்கரே அணியினர் தீப்பந்தம், திரிசூலம், உதயசூரியன் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தனர். இதேபோல சிவசேனா பாலாசாகேப் பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயர்களில் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து இருந்தனர்.
இந்தநிலையில் ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவிடுத்து உள்ளனர். இதில் அவர்கள் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 அணிகளும் கொடுத்த விருப்ப பட்டியலில் இருந்து அவர்களுக்கு ஒரு சின்னம், பெயர் தேர்தல் ஆணையத்தால் தேர்வு செய்யப்படும். தற்போது 2 அணிகளும் கொடுத்து உள்ள சின்னங்கள் ஒரே மாதிரி உள்ளதா, மற்ற கட்சிகள் பயன்படுத்தி வருகிறதா அல்லது ஏற்கனவே முடக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்த பின் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரி ஒருவா் கூறினார். மேலும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இல்லாத சின்னங்களை கூட ஒதுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.