பொய் தகவல்களை கூறி மக்களை திசை திருப்ப முயற்சி
பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு தன் எதுவும் செய்யவில்லை என்று பொய் தகவல்களை கூறி மக்களை திசை திருப்ப முயற்சி செய்வதாக முதல்-மந்திரி மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு:
பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு தன் எதுவும் செய்யவில்லை என்று பொய் தகவல்களை கூறி மக்களை திசை திருப்ப முயற்சி செய்வதாக முதல்-மந்திரி மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மக்களின் அன்பு
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று (நேற்று) கர்நாடக ரத்னா விருது வழங்கப்படுகிறது. அவர் தனது நடிப்பு தொழிலுடன் சமூக நலன் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு வந்தார். அதனால் அவருக்கு மக்களின் அன்பு கிடைத்தது. ஒரு நடிகருக்கு இந்த அளவுக்கு மக்களின் அன்பு அவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அவருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கலபுரகியில் பா.ஜனதாவினர் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு நடைபெற்றது. அங்கு 5 லட்சம் பேரை சேர்ப்பதாக அக்கட்சி தலைவர்கள் கூறினர். ஆனால் வெறும் 50 ஆயிரம் மட்டுமே அதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய பசவராஜ் பொம்மை உள்பட பா.ஜனதா தலைவர்கள் அனைவரும், என்னையும், மல்லிகார்ஜுன கார்கேவையும் இலக்காக கொண்டு பேசியுள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நான் எதையும் செய்யவில்லை என்று கூறியுள்ளனர்.
திசை திருப்ப முயற்சி
பொய் தகவல்களை கூறி மக்களை திசை திருப்ப முயற்சி செய்துள்ளனர். ஆடு மேய்ப்பவர்கள் நல வாரியத்தை அமைத்ததே எங்கள் அரசு தான். அதற்கு
ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உதவிகளை வழங்கினோம். ஆனால் குருப சமூக மக்களுக்கு தான் ஏதோ செய்துவிட்டதாக பசவராஜ் பொம்மை மாநாட்டில் பேசியுள்ளார். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, குருப சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்கவில்லை என்று முதல்-மந்திரி குறை கூறியுள்ளார்.
அந்த சமூகத்தை சேர்ந்த எச்.எம்.ரேவண்ணா, எச்.ஒய்.மேட்டி ஆகியோர் மந்திரியாக பணியாற்றினர். குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் எங்கள் கட்சியில் இருந்த எம்.டி.பி.நாகராஜ் மந்திரியாக இருந்தாரே. ஆனால் இதை எல்லாம் மறந்துவிட்டு பசவராஜ் பொம்மை பொய் தகவல்களை கூறியுள்ளார். குருப சமூகத்தை சோ்ந்த நான் முதல்-மந்திரியாக இருக்கவில்லையா?.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.