மடிகேரியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட வளையல்களை விற்க முயற்சி; வாலிபர் கைது
மடிகேரியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட வளையல்களை விற்க முயற்சி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குடகு:
குடகு மாவட்டம் மடிகேரி டவுன் கரியப்பா சர்க்கிளில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வனத்துறை சி.ஐ.டி. பிரிவு அதிகாரிகள் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கையில் பையுடன் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அப்போது வனத்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில், யானை தந்தத்தால் செய்யப்பட்ட 2 வளையல்கள் இருந்தது. இதுகுறித்து அந்த நபரிடம் வனத்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் யானை தந்தத்தால் செய்யப்பட்ட வளையல்களை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 2 வளையல்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிரதீப்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.