திருவனந்தபுரம் மேயருக்கு எதிரான புகார் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவு..!!


திருவனந்தபுரம் மேயருக்கு எதிரான புகார் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவு..!!
x

கோப்புப்படம்

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீதான புகார் குறித்து கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

இந்தியாவின் மிகவும் வயது குறைந்த மேயர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன். இந்த மாநகராட்சியின் கீழ் 295 தற்காலிக பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களின் பட்டியலை தருமாறு கேட்டு மேயர் ஆர்யா ராஜேந்திரன் மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பனுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சமீபத்தில் வெளியானது.

இது தொடர்பாக மேயர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியை சேர்ந்த இளைஞர் அமைப்புகளான இளைஞர் காங்கிரசார், பா.ஜ.க. யுவ மோர்ச்சா அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

விசாரணைக்கு உத்தரவு

இந்த நிலையில் அந்த கடிதத்தை நான் எழுதவில்லை என்று மேயர் ஆர்யா ராஜேந்திரன் மறுத்து வருகிறார். அப்படியானால் மேயர் எழுதியதாக வெளியான கடிதத்தை யார் எழுதியது? யார் அனுப்பியது? யார் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது? என்பது குறித்தான உண்மை தன்மையினை அறிய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்த் உத்தரவிட்டு உள்ளார்.

இதனிடையே நேற்று இந்த கடித விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேயரின் அறைக்குள் பா.ஜ.க. கவுன்சிலர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் கிரில் கேட்டை மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் தடியடி

இதை தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கவுன்சிலரும், நிலைக்குழு தலைவருமான சலீமை அவரது அறைக்குள் அடைத்து பூட்டினர். இதனிடையே மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இளைஞர் காங்கிரசார் மேயரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.


Next Story