ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் மேலும் 29 உடல்கள் அடையாளம் காணப்பட்டன ஒப்படைக்கும் பணி தீவிரம்
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் மேலும் 29 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விபத்தில் 293 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் 81 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து விட்டன. எனவே அவை அனைத்தும் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
அதேநேரம் இந்த உடல்களை அடையாளம் காண்பதற்காக அவற்றின் உறவினர்களிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டன. இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
அவற்றின் அடிப்படையில் 29 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. எனவே அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகளில் புவனேஸ்வர் மாநகராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி மேயர் சுலோச்சனா தாஸ் கூறுகையில், 'குறிப்பிட்ட சில உடல்களுக்கு பல குடும்பங்கள் உரிமை கோரியதால் அவற்றுக்கு மரபணு பரிசோதனை நடத்த வேண்டியிருந்தது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 29 உடல்களில் ஒன்று மட்டும் ஒடிசாவை சேர்ந்த குடும்பத்தினருடையது. மீதமுள்ள அனைத்தும் பெரும்பாலும் மேற்கு வங்காளம் மற்றும் பீகாரை சேர்ந்தவை' எனக்கூறினார்.
அடையாளம் காணப்பட்ட உடல்களை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் புவனேஸ்வர் வந்து கொண்டிருப்பதாக கூறிய சுலோச்சனா தாஸ், ஏற்கனவே 5 குடும்பத்தினர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்டு உள்ள உடல்களை அவற்றின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளதாகவும் புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் கூறினார்.
அடையாளம் காண முடியாத இந்த 81 உடல்களுக்காக 88 குடும்பத்தினரிடம் இருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும், இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாக சுமார் 20 நாட்கள் வரை ஆனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது 29 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள உடல்களின் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.