இரட்டை சகோதரர்களுக்கு மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து தண்டனை
விஜயாப்புராவில் வேலைக்கு சென்ற இடத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்ற இரட்டை சகோதரர்களுக்கு மொட்டையடித்தும், செருப்பு மாலை அணிவித்தும் நூதன தண்டனை வழங்கிய ஊர் தலைவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
விஜயாப்புரா:-
இரட்டை சகோதரர்கள்
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா (மாவட்டம்) ஹெகதிஹலா கிராமத்தை சேர்ந்தவர்கள் பீரு சவுகான் மற்றும் ராஜு சவுகான். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரர்கள் ஆவார்கள். இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் மராட்டிய மாநிலத்தின் எல்லையோர கிராமத்திற்கு வேலைக்காக சென்றனர். அந்த சமயத்தில் அவர்கள் அந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை
கற்பழிக்க முயன்றுள்ளனர்.
இதையடுத்து போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் பெண்ணை கற்பழிக்க முயன்ற சகோதரர்கள் 2 பேரையும் பஞ்சாயத்தார் முன்னிலையில் கிராம மக்கள் நிறுத்தினர்.
அப்போது பெண்ணை கற்பழிக்க முயன்றது தவறு என கூறிய ஊர் தலைவர், இரட்டை சகோதரர்களான பீரு சவுகான் மற்றும் ராஜு சவுகான் ஆகியோருக்கு தண்டனை வழங்கினார். அதாவது அவர்கள் 2 பேருக்கும் தலையை மொட்டை அடித்து, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊரை வலம் வரை செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரபரப்பை ஏற்படுத்தியது.
7 பேர் கைது
அந்த வீடியோவை பார்த்த பலரும் பஞ்சாயத்தாரின் இந்த செயலுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகள் கூறினர். மேலும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கினாலும், மனித உரிமைகளை மீறிய செயலாக இது கருதப்படுவதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே பெண்களை கற்பழிக்க முயன்ற சகோதரர்களுக்கு மொட்டியடித்து செருப்பு மாலை அணிவித்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் விஜயாப்புரா புறநகர் போலீசார் ஊர் பஞ்சாயத்தார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைவர் ராம்சிங், அனில், மங்கேஷ், ஹெமு, ராஜு, சன்னு மற்றும் ரமேஷ் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.