நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பி.க்களை தக்க வைத்துக்கொள்வதில் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே இடையே போட்டி!


நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பி.க்களை தக்க வைத்துக்கொள்வதில் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே இடையே போட்டி!
x

இன்னும் அடிமட்ட தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஆதரவை உத்தவ் தாக்கரே பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது.

மும்பை,

சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 30-ந்தேதி முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும் பதவி ஏற்றனர்.

யாருடைய தலைமையிலான அணி உண்மையான சிவசேனா கட்சி என்ற போட்டி ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே இடையே நிலவி வருகிறது. நாடாளுமன்றத்தில் மக்களவையில் 19 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 3 உறுப்பினர்களும் சிவசேனா கட்சி எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் மக்களவை உறுப்பினர்களில் 12 பேர் ஷிண்டேவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் அவர்களை தக்கவைத்துக்கொள்வதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். இதன் காரணமாகவே மக்களவையில் சிவசேனாவின் கொறடாவை மாற்றியதாக தெரிகிறது. பாவ்னா காவ்லியை மாற்றி ராஜன் விச்சாரே என்பவரை கொறடாவாக நியமித்து இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மக்களவை சபாநாயகரிடம் மனுக்கொடுத்து இருக்கிறார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் எந்த அணிக்கு அதிக ஆதரவு உள்ளதோ அவர்களையே சிவசேனா கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். ஏற்கனவே சட்டமன்றத்தில் ஆதரவை இழந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை தக்க வைக்க உத்தவ் தாக்கரே போராடி வருகிறார். உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூட்டிய எம்.பி.க்கள் கூட்டத்தில் இரண்டு எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியது தொடர்பான வழக்கு, சிவசேனா கட்சியின் கொறடாவை மாற்றிய சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஆகியவை வருகிற 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு மாற்றங்கள் ஏற்படும் என அரசு வட்டாரங்களின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.


Next Story