மராட்டியம்: ஏக்நாத் ஷிண்டே முகாமில் உள்ள அதிருப்தி மந்திரிகளின் இலாகா பறிப்பு
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முகாமில் உள்ள ஏக்நாத் ஷிண்டே உள்பட அனைத்து மந்திரிகளின் இலாகாக்களும் பறிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
சிவசேனா மூத்த தலைவரும் மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரே மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளார். அவர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ளார்.
இவர்களில் மந்திரிகள் உதய் சாமந்த், தாதா புசே, சானித்பன் பும்ரே, சாம்புராஜ் தேசாய், ராஜேந்திர பாட்டீல், ஒம்பிரகாஷ் கடு, அப்துல் சாத்தர், குலாப்ராவ் பாட்டீல் ஆகியோர் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவுடன் சேர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முகாமில் 5 கேபினட் மந்திரிகள், 4 பேர் இணை மந்திரிகள் உள்ளனர்.
இந்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முகாமில் உள்ள ஏக்நாத் ஷிண்டே உள்பட அனைத்து மந்திரிகளின் இலாகாக்களும் பறிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏக்நாத் ஷிண்டேவின் நகர்புற மேம்பாடு கூடுதலாக மந்திரி அனில் தேசாயிடமும், உதய் சாமந்தின் உயர் கல்வித்துறை ஆதித்ய தாக்கரேவிடமும், குலாப் ராவ் பாட்டீலின் குடிநீர் வினியோக துறை அனில் பரப்பிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தாதா புசேவின் வேளாண் துறையும், சானித் பும்ரேவின் தோட்டக்கலை துறையும், சங்கர் ராவ் கடக்கிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர இணை மந்திரிகள் சாம்புராஜ் தேசாய், ராஜேந்திர பாட்டீல், அப்துல் சாத்தர், ஒம்பிரகாஷ் கடு ஆகியோரின் இலக்காக்களும் பறிக்கப்பட்டு வேறு மந்திரிகளிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.