உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளம்பிய குடும்ப உறுப்பினர்கள் - ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆதரவு தெரிவித்த பால் தாக்கரேவின் பேரன்
சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சட்டரீதியாக வாதிட்டு வருகின்றனர்.
மும்பை,
சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சட்டரீதியாக வாதிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான நிகார் தாக்கரே இன்று ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த செயல் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிகார் தாக்கரேவின் தந்தை பிந்துமாதவ் தாக்கரே, சிவசேனா கட்சியின் நிறுவனர் - தலைவர் பால் தாக்கரேவின் மூத்த மகன் ஆவார். பிந்துமாதவ் தாக்கரே, 1996இல் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். அதன்படி நிகார் தாக்கரே அவருடைய பேரன் ஆவார். எனினும் பிந்துமாதவ் தாக்கரேக்கும் அவருடைய மகனுக்கும் அரசியலில் பெரிதாக ஆர்வமில்லை.
இந்நிலையில், நிகார் தாக்கரே தனது குடும்ப உறுப்பினரான உத்தவ் தாக்கரேவை எதிர்த்து காய் நகர்த்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நிகார் தாக்கரேவின் மனைவியின் தந்தை பாஜகவை சேர்ந்தவர் ஆவார். அவருடைய தந்தை ஹர்ஷ்வர்தன் பாட்டில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.
அதேபோல, பால் தாக்கரேவின் இன்னொரு மகனான ஜெய்தேவ் தாக்கரேவின் முன்னாள் மனைவியும் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
2012இல் பால் தாக்கரே மறைவுக்கு பின் அவருடைய குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு வருகிறது. இப்போது இந்த சம்பவம் அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
எனினும் நம்பிக்கையை தளரவிடாமல் போராடி வரும் உத்தவ் தாக்கரே தங்கள் அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்று எதிர்நோக்கியுள்ளார்.