தார்வார் மாவட்டம் குந்துகோலில் மத்திய மந்திரி அமித்ஷா தெருமுனை பிரசாரம்


தார்வார் மாவட்டம் குந்துகோலில் மத்திய மந்திரி அமித்ஷா தெருமுனை பிரசாரம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தார்வார் மாவட்டம் குந்துகோலில் மத்திய மந்திரி அமித்ஷா தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார்.

உப்பள்ளி:

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடகத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைெபற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக போராடி வருகின்றன. பா.ஜனதா ஜனசங்கல்ப என்ற பெயரிலும், காங்கிரஸ் பிரஜாத்வானி என்ற பெயரிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி பஞ்சரத்னா என்ற பெயரிலும் தனித்தனியாக யாத்திரை நடத்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.

பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் அடிக்கடி கர்நாடகத்துக்கு வந்து பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதமர் மோதி நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் 2 முறை கர்நாடகம் வந்துள்ளார். அமித்ஷாவும் ஒருமுறை கர்நாடகம் வந்திருந்தார்.

தெருமுனை பிரசாரம்

இந்த நிலையில் 2-வது முறையாக நேற்று முன்தினம் மத்திய மந்திரி அமித்ஷா கர்நாடகம் வந்தார். அவர் நேற்று தார்வார் மாவட்டம் குந்துகோலில் நடந்த 'விஜய சங்கல்ப' யாத்திரையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் குந்துகோலில் பசவண்ணா தேவர மாதா கோவில் முதல் காளி மாரியம்மன் கோவில் வரை 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகப்பெரிய அளவில் தெருமுனை பிரசாரம் (ரோடு ஷோ) நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் அமித்ஷா கலந்துகொண்டார்.

இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கட்சியின் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரும் அமித்ஷாவுடன் ரோடு ஷோவில் கலந்துகொண்டனர்.

இந்த ரோடு ஷோவில், வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள், திரண்டு வந்து அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பா.ஜனதா கொடியை அசைத்தும், மேளதாளங்கள் முழங்கவும், வாகனம் மீது மலர்களை தூவியும் வரவேற்பு அளித்தனர். மேலும், பா.ஜனதா தொண்டர்கள் 'மோடி... மோடி..., பாரத் மாதா கி ஜெய்....' என்று விண்ணை பிளக்கும் அளவுக்கு முழங்கினர்.

குடும்ப அரசியல்

இந்த தெருமுனை பிரசாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசுகையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியினரின் குடும்ப அரசியல் மற்றும் ஊழலுக்கு இரையாகாமல் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும். பா.ஜனதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. காந்தி குடும்பத்தை மட்டுமே காங்கிரஸ் ஆரத்தி செய்கிறது. ஜனதாதளம்(எஸ்) தாத்தா, மகன், பேரன், அவர்களின் மனைவிகள் அனைவரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்கள். இளைஞர்களுக்கு அந்த கட்சிகளில் வாய்ப்பு கிடைக்குமா?.

மோடி தலைமையிலான பா.ஜனதாவில் மட்டுமே இளைஞர்களுக்கு இடம் கிடைக்கும். மோடி, நம் நாட்டி பெருமையை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார். பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்ைட பாதுகாக்க மோடி உழைத்தார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மோடி ரத்து செய்தார். நாங்கள் கூறியபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டி வருகிறோம். வரும் தேர்தலில் மக்கள் பா.ஜனதாவை ஆதரித்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாக்களிக்க வேண்டும். குடும்ப அரசியல் மற்றும் ஊழலை ஒழிக்க மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

குந்துகோலில் நடந்த அமித்ஷாவின் ரோடு ஷோ மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் அங்கு பா.ஜனதாவுக்கு ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது.


Next Story