நாடாளுமன்ற மேலவை தலைவராக மத்திய மந்திரி பியுஷ் கோயல் மீண்டும் நியமனம்
மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியுஷ் கோயல் நாடாளுமன்ற மேலவையின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மேலவையின் தலைவராக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகம், ஜவுளி துறைக்கான மந்திரி பியுஷ் கோயல் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரை பிரதமர் மோடி ராஜ்யசபைக்கான விதிகளின்படி நியமனம் செய்து உள்ளார்.
இதுபற்றிய தகவல் ராஜ்யசபை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு கோயல் நாடாளுமன்ற மேலவையின் தலைவராக பிரதமர் மோடியால் நியமனம் செய்யப்பட்டார்.
எனினும், நடப்பு ஆண்டு ஏப்ரலில் பியுஷ் கோயலின் எம்.பி.க்கான பதவி காலம் நிறைவடைந்தது. இதன்பின்னர், கடந்த 8ந்தேதி கோயல் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் 27 பேர் புதிதாக ராஜ்யசபை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். மராட்டியத்தில் இருந்து எம்.பி.யாக கோயல் தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர் அவையின் தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். உலகின் மிக பெரிய கட்சியான பா.ஜ.க.வில் தனது 35 ஆண்டு கால அரசியல் வாழ்வில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை கோயல் வகித்துள்ளார். கட்சியின் தேசிய பொருளாளராக உள்ளார்.
2019 பொது தேர்தலின்போது, தேர்தல் அறிக்கை மற்றும் விளம்பர குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். 2014 பொது தேர்தலில் பா.ஜ.க.வின் தகவல் தொடர்பு பிரசார குழு தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.