தேசிய அளவில் அனைத்து டாக்டர்களுக்கும் தனிப்பட்ட அடையாள எண் மருத்துவ கமிஷன் நடவடிக்கை
அனைத்து டாக்டர்களும் இனி தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு என தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும் என தேசிய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பணியில் உள்ள அனைத்து டாக்டர்களும் தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.
இவ்வாறு பதிவு செய்யப்படும் டாக்டர்களுக்கு நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியத்தின் (இ.எம்.ஆர்.பி.) மற்றும் தேசிய மருத்துவ கமிஷன் மூலம் தேசிய அளவில் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும். இது மருத்துவ பணி செய்வதற்கான தகுதியை வழங்கும்.
இந்த அறிவிக்கையின்படி, தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை மருத்துவ தகுதியை பெற்று, தேசிய தகுதித்தேர்வின் (நெக்ஸ்ட்) மூலம் தகுதி பெற்றவர்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்ய தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று, இந்தியாவில் நெக்ஸ்ட் தேர்வில் வெற்றி பெற்றவர்களும், குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி இந்த பதிவை செய்ய முடியும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு தகுதி வாய்ந்த டாக்டர்கள் தாங்கள் பணி செய்ய விரும்பும் மாநிலம் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதை பரிசீலிக்கும் மாநில மருத்துவ கவுன்சில், இதற்கான கட்டணத்தை பெற்று 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கும்.
இந்த உரிம சான்றிதழில் ஒரு பதிவு எண் இருக்கும். அதில் சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் குறியீட்டுடன் தனிப்பட்ட அடையாள எண்ணும் பின்னொட்டாக இணைக்கப்பட்டு இருக்கும்.
இவ்வாறு மாநில மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் கிடைத்தபின் சம்பந்தப்பட்ட நபரின் விவரங்கள் தேசிய மருத்துவ பதிவேடு மற்றும் மாநில மருத்துவ பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படும்.
அதேநேரம் தற்போது பணியாற்றி வரும் டாக்டர்களும் இந்த முறையை பின்பற்றி 3 மாதங்களுக்குள் தனிப்பட்ட அடையாள எண்ணை பெற வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
அதன்படி, 'இந்திய மருத்துவப் பதிவேடு அல்லது மாநில மருத்துவப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து டாக்டர்களும், இந்த ஒழுங்குமுறையை வெளியிட்ட 3 மாதங்களுக்குள் நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியத்தின் (இ.எம்.ஆர்.பி.) இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும். அத்துடன் ஒருமுறை நடவடிக்கையாக பதிவு எண்ணை பெற வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
டாக்டர்கள் பதிவேற்றும் இந்த விவரங்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் ஏற்றப்பட்டு தேசிய மருத்துவ கமிஷனின் இணையதளத்திலும் வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன்படி பதிவு எண், பெயர், பதிவு நாள், பணி செய்யும் ஆஸ்பத்திரி அல்லது நிறுவனத்தின் பெயர், மருத்துவ தகுதி, சிறப்பு பிரிவு, படித்த நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் என ஒரு டாக்டரின் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய மருத்துவ கமிஷன் கூறியுள்ளது.